கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த (28) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சும் மாகாண மீன்வள அமைச்சும் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாகாண மட்டத்தில் கடற்றொழில் துறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கக்கூடிய சேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கடற்றொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் மாகாண சபைகளுடன் இணைந்து திட்டங்களை தயாரித்து அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில் தொடர்பில் கடந்த காலங்களில் மத்திய அரசும் மாகாண சபையும் இரண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமையினால் பெருமளவு பணம் விரயமாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து செயற்படுவதன் ஊடாக கடற்றொழில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார். ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய தனித்தனியாக எதுவும் செய்ய முடியாது, ஆனால் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டத்தில் ஒன்றிணைவதன் மூலம், வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று திரு.ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.
இங்கு உரையாற்றிய கடற்றொழில் பிரதியமைச்சர் திரு.ரத்ன கமகே, 2025ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 62.85% அதிகரிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கு மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் கடற்றொழில் அமைச்சு மற்றும் மாகாண சபை மீன்வள அமைச்சுக்கள் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்றொழில் கூட்டுத்தாபனம், NARA நிறுவனம், NAQDA நிறுவனம், Cey-Nor மற்றும் NorthSea நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மாகாண சபை மட்டத்தில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் தெரிவித்தார்.
அமைச்சகத்தின் கீழ் உள்ள NARA மற்றும் NAQDA போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. மீன்பிடி உபகரணங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மாகாண சபைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் Cey-Nor மற்றும் NorthSea நிலையங்களின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிராதானிகள் மற்றும் மாகாண மீன்வள அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.