en banner

WhatsApp Image 2025 05 15 at 10.11.11 1

இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

இம் மீன் குஞ்சுகளை இடுவதற்காக இருபத்து இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், ஒரு குஞ்சின் பெறுமதி 12.50 ரூபாவாகும். இச் செலவில் சுமார் பன்னிரண்டு கோடி ரூபா அரசாங்க முதலீடாக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மிகுதி பத்து கோடி ரூபா அப்பிரதேச மீனவ சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு, மாகாண சபைகள் மற்றும் ஏனைய திட்டங்களிலிருந்து கிடைத்த உதவிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுப் பதினைந்து (115) நிரந்தர நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீனவ சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் மாதாந்த மீன் குஞ்சு இடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம், திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததன் பின்னர் ஒரு மீனவரின் மாதாந்த குறைந்தபட்ச அறுவடையை 500 கிலோகிராம் வரை அதிகரிப்பதாகும். இதன் மூலம் ஒரு மீனவரின் மாதாந்த குறைந்தபட்ச வருமானம் 150,000 ரூபாவை தாண்டுவதுடன், பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளினூடாக குடும்பப் பெண்களுக்கு ஆகக் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாவைத் தாண்டும் மாதாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.

இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், மீனவர் சங்கங்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தி அவர்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்ளல், மகளிர் குழுக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து திட்டம் குறித்துத் தெளிவூட்டல், மீனவர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்குபற்றலுடன் ஐந்து நாள் திட்டமிடல் செயலமர்வை நடாத்துதல், கடந்த ஐந்து வருட தரவுகளைப் பகுப்பாய்வு செய்து எதிர்பார்க்கப்படும் அறுவடைக்காக மீன் குஞ்சு இடும் திட்டத்தை உருவாக்குதல், நிதிப் பரிமாற்றத் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் எழக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கலந்துரையாடி விதிமுறைகளின் தொகுப்பொன்றை அங்கீகரித்தல் போன்ற பல படிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

"வெவ அபே கம்ஹலய்" திட்டம் தேசிய மட்டத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலில் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் எனவும், மீனவர் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போசாக்குக் குறைபாடுகளை முற்றாக நீக்குவதற்கான முயற்சிக்கும் பெரும் உந்துசக்தியாக அமையும் எனவும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 WhatsApp Image 2025 05 15 at 10.11.11

சமீபத்திய செய்திகள்

Youtube