கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பதுளை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அந்த மாவட்டத்தில் விரிவான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்லவும் இணைந்துகொண்டார்.
மஹியங்கனை, சொரபோர நீர்த்தேக்கத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர், அங்கு தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீனவர்களுக்குத் தெரிவித்தார்.
மேலும், மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக வளர்ந்துள்ள ஒரு வகை பாசி குறித்து ஆய்வு செய்தார். அத்துடன், நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக "மீன்கள் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் தடுப்பு வலை (Barricade Net)" ஒன்றை நிறுவும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு விசேட நிகழ்வாக, ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவின் அழைப்பின் பேரில், பிரதி அமைச்சர் வன்னில எத்தோவை சந்தித்து நன்னீர் மீன்பிடித் தொழில் குறித்து கலந்துரையாடினார். அப்போது, மாதுரு ஓயாவில் ஆதிவாசி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஒரு மீனவர் இறங்குதுறை தேவை என்பதை வன்னில எத்தோ சுட்டிக்காட்டினார். இயற்கை சூழலைப் பாதுகாத்து அந்த மீனவர் இறங்குதுறையை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பிரதி அமைச்சர் இணக்கம் தெரிவத்தார்.
இந்த கண்காணிப்பு விஜயங்கள் மூலம் பதுளை மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன்பிடித் தொழிலின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து நேரடி புரிதலைப் பெற முடிந்தது என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம், அத்தொழிலை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.