இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று ஜூன் 23, பிரான்சில் நடைபெற்றது.
.
இம் முக்கிய சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாச, தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (NARA) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கணபதிப்பிள்ளை அருளானந்தன் மற்றும் இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சேரசிங்க யாப்பா ராஜப்பிரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐரோப்பிய கடல்சார் பயிற்சி மையத்தின் (CEFCM) பணிப்பாளர் திரு. அலன் பொமேஸ், பிரதிப் பணிப்பாளர் மற்றும் கடல் அறிவியல் மற்றும் கடல்சார் பொருளாதாரம் தொடர்பான நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி முஸ்தபா எல் கெட்டாப், மற்றும் அபிவிருத்தி அதிகாரி கிறிஸ்டோப் ஹர்வே (பிரான்ஸ் தேசிய இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்) ஆகியோருடன் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து ஆழமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அமைச்சின் செயலாளரினால் பின்வரும் முக்கிய துறைகளில் பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டது:
நீரியல் வளர்ப்பு: SPF Penaeus monodon (இறால்) வளர்ப்பு, சிப்பி வளர்ப்பு, அல்கா வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் கடல் அர்ச்சின் (Echinodermata) போன்ற உயிரினங்களை வளர்த்தல்.
மீன்பிடித் தொழில்: நன்னீர் மற்றும் கடல்நீர் மீன்பிடித் தொழில் மற்றும் அதற்கான நவீன நுட்பங்கள்.
உயிர்த்தொழில்நுட்பம்: உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி அபிவிருத்தி.
உணவுப் பதப்படுத்தல்: மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
மனித வளம்: மீன்பிடிப் படகு இயந்திரவியலாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
சந்தைப் படுத்தல் மற்றும் சான்றிதழ்: மீன் உற்பத்தி சந்தைப்படுத்தல் மற்றும் MSC போன்ற சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், CEFCM பிரதிநிதிகள் இலங்கையின் தேவைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப பயிற்சித் திட்டங்களையும் பாடத்திட்டங்களையும் வகுத்து எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்தனர். இவ்வாறான ஒத்துழைப்பானது நாட்டின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் நிலையான வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.