WhatsApp Image 2025 01 27 at 14.27.03

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், குறிப்பாக மீன்பிடித் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இச்சந்திப்பின்போது, பாகிஸ்தான் பிரதமரின் அன்பளிப்பாக ஒரு சிறப்புப் பரிசு உயர்ஸ்தானிகரால் அமைச்சருக்கு வழங்கப்பட்டது. இது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்தது. மீன்பிடித் துறையில் கூட்டாண்மை முயற்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை அவர் வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் முழுமையான பயனை இலங்கை பெற்றுக்கெள்ளாதது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திலாப்பியா மீன்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை என்பதை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். திலாப்பியா மீன்களுக்கான கேள்வி பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வர்த்தக உறவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிரித் தொழில்நுட்பத் துறையில் பாகிஸ்தானின் மேம்பட்ட நிபுணத்துவம் மற்றும் மீன்பிடித் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் மஹ்வாஷ் சாமி மற்றும் இரண்டாம் செயலாளர் இப்திகார் ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் கலந்துரையாடலில் பங்குபெற்றார்.

WhatsApp Image 2025 01 27 at 14.27.04 1

WhatsApp Image 2025 01 27 at 14.27.04

WhatsApp Image 2025 01 27 at 14.26.56 

Youtube