மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிகழ்வு கத்துலுவ குருக்கந்த படகுத்துறையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது.
தென் மாகாண மீன்வள அமைச்சின் அனுசரணையுடன் "தேசதியக மகிமை" திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் தென் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர் விதுர காரியவசம் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குமான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமைந்ததுடன், கொக்கல வாவியின் நீர்வாழ் உயிரின வளங்களைப் பாதுகாப்பதற்கும், மீனவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இதுபோன்ற திட்டங்களை எதிர்காலத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், "Clean Sri Lanka" திட்டத்தின் கீழ், பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசதியக மகிமை" திட்டம் பெப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை காலி மாவட்டத்தில், ஹபரதுவ தேர்தல் தொகுதியில் நடைபெறுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்தல் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் இத்திட்டத்தினூடாக கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சாலை அபிவிருத்தி, கால்வாய் புனரமைப்பு மற்றும் கிராமப்புற பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய பொது வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.
அத்தோடு சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டுறவு பிராந்திய மையங்கள் நிறுவப்படும், விவசாய மற்றும் மீன்பிடி துறைகளில் அபிவிருத்தி திட்டங்களும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக கிராமப்புற தொழில்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதேபோல், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவ சிகிச்சைகள் மூலம் பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும், மேலும் சுத்தமான சூழலை மேம்படுத்துவதற்காக நகர தூய்மை மற்றும் கழிவு முகாமைத்துவத்தை பேண ஊக்குவிக்கப்படும்.