கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (ஜூலை 8) அமைச்சில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், குறிப்பாக வட மாகாண அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வட மாகாண அபிவிருத்தி மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தியில் புதிய அரசாங்கம் செலுத்தும் முக்கிய கவனம் குறித்தும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதன்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அமைச்சர் விளக்கினார்.
கைத்தொழில் வலயங்கள்: பரந்தன், காங்கேசன்துறை, மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் உருவாக்கப்பட்டு வரும் புதிய கைத்தொழில் வலயங்கள்.
தொழிற்சாலைகள் : 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட ஒட்டுசுட்டான் தொழிற்சாலை மற்றும் மீள ஆரம்பிக்கப்படவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை.
உட்கட்டமைப்பு வசதிகள்: வடக்கில் புதிய பாதைகளை நிர்மாணித்தல் மற்றும் 35 வருடங்களுக்குப் பின் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை.
என பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் "இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் புதிய யாழ்ப்பாணத்தைக் காண முடியும்," என நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை ஸ்திரத்தன்மையுடன் மீண்டெழும் இக்காலகட்டத்தில் பிரித்தானியாவின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் என அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு பிரித்தானியாவில் சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குவதற்கும், கல்வித் துறையின் மேம்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குவதோடு. மேலும், புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் செய்வது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தனது சமீபத்திய யாழ்ப்பாண விஜயத்தை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர், வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குப் பாரிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின்போது, வட மாகாணத்தின் மனித உரிமைகள் நிலவரம் குறித்தும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், குறிப்பாக செம்மணி சம்பவம் தொடர்பான விசாரணைகள் எவ்வித தடையுமின்றி சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதற்கு அரசாங்கம் வழிவகுத்துள்ளதை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டெர்க் அவர்கள் அரசாங்கத்தின் மனித உரிமைகள் மற்றும் இன ஐக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை பாராட்டயிருந்ததை எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார்.