மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கூட்டம் நேற்று (25) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அபுபக்கர் ஆதம்பாவா, அர்கம் இல்யாஸ், ரொஷான் அக்மீமன ஆகியோரும், மாவட்ட மீன்பிடிப் பிரதிநிதிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்:
மீன்பிடி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய முறை:
கடல் அட்டைகள், சங்குகள், இறால்கள் மற்றும் அலங்கார மீன்களைப் பிடிப்பதற்கான சுழியோடிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இங்கு அறிவித்தது. அக்டோபர் 30 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும், விண்ணப்பதாரர்களின் அனுபவம், படகின் உரிமை மற்றும் காப்புறுதி போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நேர்காணலுக்குப் பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) மற்றும் கட்டண திருத்தம்:
மீனவர் சமூகத்திடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, VMS கருவிகளுக்கான மாதக் கட்டணத்தை இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு நிலைக்குக் குறைக்க தொடர்புடைய நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே இங்கு தெரிவத்தார். மேலும், மூன்று மாதங்களுக்கு மேல் செயலிழந்திருக்கும் படகுகளுக்கான VMS கட்டணத்தை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மீன்பிடிப் படகுகள் கணக்கெடுப்பு:
சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதையும் உள்ளடக்கிய மீன்பிடிப் படகுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் மீன்பிடிப் படகுகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பு ஒன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதுடன், கணக்கெடுப்பிற்கு உட்படாத படகுகளின் இயக்க அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்காமல்விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீனவர் காப்புறுதி முறை:
கடந்த காலத்தில் நடந்த மீன்பிடி விபத்துகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர் காப்புறுதி முறைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச, மீனவர்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும், குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளின்போதும், திடீர் விபத்துகளின்போதும் நிதி நிவாரணம் கிடைக்கும் வகையில் காப்புறுதித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மீனவர் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீனவர் சங்கங்களை வலுப்படுத்துதல்:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மீனவர் சமூகத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக, மாவட்ட மட்டத்தில் செயலிழந்திருக்கும் மீனவர் சங்கங்களை மீண்டும் செயல்பட வைத்து, அவர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் மற்றும் கடன் வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல், மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்றும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மீன்பிடித் துறையை மேம்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே வலியுறுத்தினார்.