அவுஸ்திரேலிய பொதுநலவாய ஆளுநர் நாயகம் சாம் மோஸ்டின், இலங்கைக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பால் (IOM) முன்னெடுக்கப்படும் இலங்கை கப்பல் கண்காணிப்பு அமைப்பின் (VMS) செயற்பாட்டைக் கண்காணிப்பதற்காக மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்களுக்கான பிரதி அமைச்சர் ரத்னா கமகே ஆளுநரை வரவேற்றார். ஆஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதர் போல் ஸ்டீவன்ஸ், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின் தூதுவர் கிறிஸ்டின் பார்கோ, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கற்ற கடல்சார் இடம்பெயர்வு மற்றும் ஏனைய நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS)பயன்படுத்தப்படுகிறது.
கப்பல்கள் ஆபத்தில் இருக்கும்போது கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்த அமைப்பு வழங்கும் முக்கிய ஒத்துழைப்பு குறித்தும் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து குறித்த குழுவினர் VMS டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகுகளைப் பார்வையிட்டதுடன், மீன்பிடித் தொழிலில் VMS தொழில்நுட்பம் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்கள் குறித்து கடற்தொழில் சமூகத்துடன் கலந்துரையாடினர்.
இந்தநிலையில், VMS குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் நாயகம், “இலங்கை தமது கடல்சார் இடங்களை மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் கடற்தொழில் சமூகங்களை மேம்படுத்துவதில் VMS ஏற்கனவே உறுதியான பிரதிபலிப்பை வழங்குவதை முன்னிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறினார்.
ஆளுநர் நாயகத்தின் விஜயம் குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, “மாண்புமிகு சாம் மோஸ்டிங்கின் இலங்கை வருகை இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் ஒரு தீர்க்கமான தருணமாகும். இலங்கையின் மீன்வளத்திற்கான அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், VMS இந்த கூட்டாண்மையின் முக்கிய பங்களிப்பாகிறது.''
''அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு நன்றி, இலங்கை சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க மீன்வளப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தமது திறனை கணிசமாக அதிகரித்துள்ளது'' என்று அவர் மேலும் கூறினார்.
2021-2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பால் செயல்படுத்தப்பட்ட VMS திட்டம், 9.96 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியின் அடிப்படையில் இலங்கையின் நெடுநாள் மீன்பிடிக் கப்பல்களின் (4,500 இற்கும் மேற்பட்டவை) ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இது ஒரு கடற்தொழில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு கருவியாகும். இது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) மற்றும் கடல்சார் சட்ட அமுலாக்க முகாமைகள் நெடுநாள் மீன்பிடிக் கப்பல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இது கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் சிக்கல்களை ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காண உதவுகிறது.
அவசரநிலை ஏற்பட்டுமாயின் VMS டிரான்ஸ்பாண்டர் ஒரு அனர்த்த கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. ஒருங்கிணைந்த மற்றும் சரியான நேரத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பங்களிக்கிறது. மேலும் கடற்தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
















