ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (04) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உவர் மற்றும் நன்னீர் மீனவ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வருகை தந்திருந்த சங்கங்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் இதன்போது முன்வைத்தனர். குறிப்பாக சிறிய ரக படகுகளுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. மீன்பிடித் துறைமுகங்களில் சேவைகளை வழங்குவதிலுள்ள குறைபாடுகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் நங்கூரமிடும் தளங்களுக்கான அணுகுமுறை வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சரினால் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நன்னீர் மீன்பிடித்துறை குறித்து கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்; குளங்களில் வண்டல் மண் நிறைந்துள்ளமை மற்றும் நீர்வாழ் தாவரங்களின் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான விரைவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, மீனவர்களுக்குத் தேவையான வெப்பக்காப்பு மீன்பெட்டிகள் (Insulated boxes) மற்றும் பலகைகள் (Pallets) போன்ற உபகரணங்களை வழங்குவதை மாகாண அமைச்சின் ஒத்துழைப்புடன் முறைப்படுத்துமாறு அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், கடலோரப் பாதுகாப்பு, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூல் அமைச்சுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்த நெகிழ்வுத்தன்மையான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அத்துடன், தென் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கும் தீவிர பங்களிப்பை அமைச்சர் இதன்போது பாராட்டினார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, திலீப் வெதஆரச்சி, ஹம்பாந்தோட்டை மேயர், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர், அம்பலாந்தோட்டை பிரதேச சபையின் தவிசாளர், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுனு ஆராச்சி, சீநோர் (Cey-Nor) நிறுவனத்தின் தலைவர், அமைச்சின் மேலதிக செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் (அபிவிருத்தி) மற்றும் நாரா (NARA), நெக்டா (NAQDA) ஆகிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.















