இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழில் துறையின் நிலைபேறானதன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விரிவானதும் ஒன்றிணைந்ததுமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று 22ம் திகதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கலந்துரையாடலில், கரையோர மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், ஸ்டெபனி பிரனாந்து மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோரும், இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், நாரா நிறுவனம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராலிங்கம் சந்திரசேகர், "சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி எமது கடல் எல்லையையும், மீனவ மக்களையும், ஒட்டுமொத்த கடல் வளத்தையும் அழிக்கும் செயற்பாட்டிற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'லைட் கோர்ஸ்', 'லைலா சுருக்கு' வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். இந்த நிலை தொடர்ந்தால், எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு கடல் பாலைவனத்தையே நாம் விட்டுச் செல்ல நேரிடும். கடற்றொழிலையும் மீனவ மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த உறுதியான தீர்மானங்களை எடுத்துள்ளோம்," என்று வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பிரதான நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. ஒன்றிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள்:கரையோர மாவட்டங்கள் 15ஐயும் உள்ளடக்கும் வகையில், கடற்படை, பொலிஸ், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் மீனவ சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வலுவான ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஸ்தாபிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரிய சட்டவிரோத நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் இதன் மூலம் வகுக்கப்படும்.
2. அவசர அழைப்பு இலக்கங்கள் (Hotlines) அறிமுகம்:கடலில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களும் மீனவ சமூகத்தினரும் உடனடியாகத் தகவல் வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் வழங்குபவர்களின் அடையாளம் மற்றும் விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் முழுமையான உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.
* கடற்படை: 105
* கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்: 106
3. சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தல்: தற்போதுள்ள கடற்றொழில் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் துரிதமாகச் சமர்ப்பிக்கவும், தற்போதுள்ள ஒழுங்குவிதிகளை காலத்தின் தேவைக்கேற்ப திருத்தியமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
4. துரித சுற்றிவளைப்புகள் மற்றும் விழிப்புணர்வு: சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை இலக்கு வைத்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவினர் ஒன்றிணைந்து துரித சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவும், அதனுடன் இணைந்ததாக மீனவ சமூகத்தினரிடையே பாரிய விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
5. இங்கு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பி. கே. கோலித கமல் ஜினதாச:
"சட்டவிரோத உபகரணப் பாவனையால் ஏற்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதே இன்றைய கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது. கடல் என்பது அமைச்சுக்கோ, கடற்படைக்கோ மாத்திரம் உரியதல்ல, அது மீன்பிடியில் ஈடுபடும் மற்றும் ஈடுபடாத இந்நாட்டின் அனைவருக்கும் உரித்தான ஒரு பொதுச் சொத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த வளத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாம் எடுத்த தீர்மானமாகும்," என்றார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
"பல தசாப்தங்களுக்கு முன்னர் சட்டப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சில மீன்பிடி முறைகளால் கூட இன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மீனவ சமூகத்தினரே சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கமைய, சட்டப்பூர்வமான அந்த மீன்பிடி முறைகளையும் நாரா நிறுவனத்தின் ஊடாக மீளாய்வு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது மீன்வளம் வேகமாக அருகிச் செல்வதற்கு மிகச் சிலரால் மேற்கொள்ளப்படும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளே பிரதான காரணமாகும். இதனைக் கட்டுப்படுத்த சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், கீழ் மட்டத்தில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதும் அவசியமாகும்," எனக் குறிப்பிட்டார்.
இந்த ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மூலம், இலங்கையின் கடற்றொழில் துறையை நிலைபேறானதும், உயர் பொருளாதார பெறுமதியுடையதுமான ஒரு துறையாக மாற்றுவதே அரசாங்கத்தின் உறுதியான நோக்கமாகும்.