அனுராதபுர மாவட்ட நன்னீர் மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் நடைபெற்ற 16-வது மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மீன்பிடி பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் அனுராதபுர மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார நவரத்ன, நிமல் பலிஹேன ஆகியோரும், அனுராதபுர மாவட்டச் செயலாளரும், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களான தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டு அதிகார சபை (NAQDA), இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், சீலோர் நிறுவனம் (CEYNOR Foundation), மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும், மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நன்னீர் மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் கலந்துரையாடல்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாடு, குளங்களை குத்தகைக்கு விடும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள், மீன் குஞ்சுகளை விநியோகிப்பதில் ஏற்படும் தாமதங்கள், விவசாய மற்றும் மீனவர் அமைப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பு இன்மை, அத்துடன் இடைத்தரகர்களின் சுரண்டல் மற்றும் விற்பனை வசதிகளின் பற்றாக்குறை போன்ற நன்னீர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள்
இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்குப் பல தீர்மானங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
குளங்களை குத்தகைக்கு விடுவதற்கு முறையான மற்றும் வெளிப்படையான நடைமுறையொன்றைத் தயாரித்தல்.
தேவைக்கேற்ப மீன் குஞ்சுகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.
விவசாய மற்றும் மீனவர் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்குதல்.
இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து, மீனவருக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பதற்காக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டை வலுப்படுத்தல்.
மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், "அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்பைப் பெற்று, மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அந்த இடத்திலேயே தீர்ப்பதே எமது நோக்கமாகும். இடைத்தரகர்கள் இன்றி மீனவருக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நியாயமான விலையையும் பெற்றுக்கொடுத்து, மீன் உற்பத்தியை அதிகரித்து, அதன் நன்மைகள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் முறைமையொன்றை உருவாக்குவதன் மூலம் இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்," என்று தெரிவித்தார்.









