en banner

WhatsApp Image 2026 01 28 at 17.19.46வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரொருவர் பட்டினங்கல மீன்பிடி இறங்குதுறைக்கு நேரில் விஜயம்

யால தேசிய பூங்காவை அண்டி அமைந்துள்ள பட்டினங்கல மற்றும் ஆமதூவ மீனவர் இறங்குதுறைகளில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் நேற்று (27) விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வரலாற்றில் கடற்றொழில் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரொருவர் பட்டினங்கல மீன்பிடி இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிகழ்வில் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் ருவன் செனரத், திஸ்ஸமஹாராம பிரதேச சபை தவிசாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தங்காலை உதவிப் பணிப்பாளர் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பட்டினங்கல மீனவர் இறங்குதுறை:
யால தேசிய பூங்காவினுள் அமைந்துள்ள இந்த இறங்குதுறையில் ஏற்றுமதிப் பெறுமதி மிக்க சிங்கிறால் (Lobster) போன்ற மீன்வளம் கிடைப்பது அவதானிக்கப்பட்டது. தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதியுடன் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்திய 07 படகுகளும் 18 மீனவர்களும் மட்டுமே இங்கு தொழிலில் ஈடுபடுகின்றனர்.

காலப்போக்கில் இங்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் வாடி வசதிகள் குறைவடைந்துள்ளதாக மீனவ சமூகத்தினர் சுட்டிக்காட்டினர். படகுகளின் எண்ணிக்கையை 10-12 வரையும், மீனவர்களின் எண்ணிக்கையை 30-35 வரையும் அதிகரித்துத் தருமாறும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்மையைத் தீர்த்து வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது வனஜீவராசிகள் வலயத்தினுள் அமைந்துள்ளதால், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து இப்பிரச்சினைகளைத் தீர்க்கத் தலையிடுவதாகப் பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

ஆமதூவ மீனவர் இறங்குதுறை மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி:
78 மீன்பிடிப் படகுகள், 02 இயந்திரத் தோணிகள் மற்றும் சுமார் 150 மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் ஆமதூவ இறங்குதுறையில் பல முக்கிய பிரச்சினைகள் இனங்காணப்பட்டன. துறைமுகத்திற்கான வழியை அடையாளம் காண ‘பீக்கன் லைட்’ (Beacon Light) விளக்கு அமைப்பொன்றின் தேவையையும், பழுதடைந்துள்ள பிரவேச வீதியைத் திருத்தியமைத்து மழைக் காலத்தில் போக்குவரத்தை இலகுவாக்க மதகு (Culvert) ஒன்றை அமைத்துத் தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த இறங்குதுறைகளில் நிலவும் கடும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக இம்முறை அமைச்சின் ஊடாக 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். மேலும், பிடிக்கப்படும் மீன் அறுவடையை தரத்துடன் தற்காலிகமாகக் களஞ்சியப்படுத்துவதற்கு Insulated boxes வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சூழல் உணர்திறன் மிக்க வலயங்களில் இந்த இறங்குதுறைகள் அமைந்துள்ளதால், சூழலைப் பாதுகாத்துக்கொண்டு, பேண்தகு முறையில் கைத்தொழிலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தைப் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் மீனவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, சட்டபூர்வமான வரையறைக்குள் இந்த மீனவ மக்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிடும் எனப் பிரதி அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

WhatsApp Image 2026 01 28 at 17.19.49

சமீபத்திய செய்திகள்

Youtube