கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, தற்போதைய பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறிந்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மத்தகே, தென் மாகாண ஆளுநரின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பண்டார, மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, துறைமுகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் ஆய்வு செய்யப்பட்டன. துறைமுகத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் இரண்டு பம்புகள் செயலிழந்துள்ளதாக கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துடன் (contractor) கலந்துரையாடப்பட்டது. மேலும், கப்பல்களின் நுழைவுகளை தடுக்கும் கருங்கல் பாறையை அகற்றுவதற்கான தேவையும் முக்கியமாக கருத்திற்கொள்ளப்பட்டது.
துறைமுகத்தில் மின்விளக்குகளை நிறுவுவது, கழிவுகளை நிரந்தரமாக மேலாண்மை செய்வது, மீனவர்களுக்கான சுகாதார வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்பட்டன. மேலும், அதிகப்படியான மீனவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தெவிநுவர துறைமுகத்திற்கு அருகில் புதிய ஜெட்டி (jetty) ஒன்றை அமைப்பதற்கான யோசனை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்கள், இலங்கை மீன்பிடித் துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் பொறுப்பேற்றதிலிருந்து, நாட்டின் அனைத்து மீன்பிடி துறைமுகங்கள், துறைமுகங்களுக்கான நிரந்தர தளங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வள மீன்பிடி பகுதிகளை முறையாக ஆய்வு செய்து, அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இன்று காலையில் மிரிஸ்ஸ துறைமுகத்தை பார்வையிட்டு, பின்னர் தெவிநுவர துறைமுகத்தை வந்துள்ளோம். வலய நிர்வாகம், மீன்பிடித்துறையின் பிரதிநிதிகள், மீனவ சமூகத்தினருடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொண்டோம். இலங்கையின் மீன்பிடி துறைமுகங்களின் செயல்திறனை அதிகரிக்க வருகிற ஐந்து ஆண்டுகளில் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக தெவிநுவர துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்."என்று தெரிவித்தார்.