2023.06.08ஆந் திகதி பாராளுமன்ற கூட்ட மண்டபத்தில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வட மாகாண பிரதேச செயலாளர்,
கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர்ககள் அடங்கலாக வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் பலருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வண்ணி ஆராச்சி ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்து வந்த மற்றும் பயிரிட்டு வந்த பிரதேசங்கள் யுத்தம் காரணமாக மக்கள் அதனை விட்டு நீங்கியமையால் காடு வளர்ந்து வன விலங்குகள் பெருகியமையால் அவை வன விலங்கு வலயமாக மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய இடமாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது அக்காணிகள் மக்கள் வாழ்வதற்கும் பயிரிடுவதற்கும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் இருவரும் பணிப்புரை வழங்கினர்.
தற்போது இக்காணிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், அவைகள் தற்போது G.P.S தொழில்நுட்பத்தின் மூலம் வரைபடம் எடுத்து இலகுவாக இனம் காண முடியுமெனவும், விரைவில் காணிகள் தொடர்பான தேசியக் குழுவுக்கு சமர்ப்பித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
இங்கு வன விலங்கு திணைக்களத்துக்குரிய கடனீரேரி மற்றும் வாவிகளைப் புனரமைப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முக்கியமாக நந்திக் கடல் மற்றும் நாயாறு கடனீரேரியை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அவை செயற்படுத்த முடியாமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் லஹூகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களில் உள்ள வனவிலங்கு வலயங்களுக்குரிய வாவிகளை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் திரு ஆர்.எம்.சீ.எம். ஹெரத் ஆகியோர்களுடன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.