en banner

WhatsApp Image 2025 07 14 at 17.16.15

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பிறகு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், தமிழ்நாட்டு மீனவர்களின் சட்டவிரோத 'Bottom trawling' மீன்பிடிப் படகுகளால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 'Bottom trawling' மீன்பிடி முறை தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மீனவர்களும் மிகக் குறைந்த நாட் கூலிக்கு வேலை செய்யும் வறிய மக்கள் என்பதை வலியுறுத்திய அவர், கலாச்சார ரீதியாகவும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலும் இருதரப்பு மீனவர்களுடனான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் புரிதலை ஏற்படுத்தவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் குழு இலங்கை வந்து சென்றதாகவும், தான் தமிழ்நாடு சென்றபோது அவர்களைச் சந்தித்து சகோதரத்துவத்துடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ராமலிங்கம் நினைவுகூர்ந்தார். உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை ஏற்று, வருங்காலத்திலும் இருநாட்டு மீனவ சமூகங்களுக்கிடையில் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் அதிகரித்து புரிதலை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்தார்.

கடற்றொழில் துறை அபிவிருத்தி குறித்துப் பேசிய அமைச்சர் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கில் மீனவத் துறைமுகங்கள் இல்லை எனவும், பேசாலை, குருநகர் மற்றும் பருத்தித்துறை போன்ற இடங்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான படகு வசதிகளும், களஞ்சிய வசதிகளும் வடக்கு மீனவர்களிடம் இல்லை என்பதையும், ஒன்றிரண்டு சிறிய படகுத்துறைகளை அமைக்க சர்வதேச உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மீனவத் துறை சார்ந்த அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து சாதகமான பதிலை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர், விரைவாகப் இந்திய உதவியில் பருத்தித்துறை மீனவத் துறைமுகப் பணிகளை ஆரம்பிப்பது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்துக்குச் சொந்தமான படகு உற்பத்தி நிறுவனமான சீனோர் நிறுவனத்தின் கட்டட நிர்மாணப் பணிகளுக்கும் இந்தியா உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவத்தார்.

மேலும், இந்தியா உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தை ஒரு நம்பிக்கை நிதியத்தின் மூலம் முறையாக முகாமைத்துவம் செய்வது குறித்தும், அச்சுவேலி தொழிற்துறை வலய (Industrial Zone) நிர்மாணம் மற்றும் அதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புகள் கோரப்பட்டுள்ளது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை போன்று தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்தும் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், விரைவாக சரக்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

தொடர்ச்சியான இந்தியாவின் உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் ராமலிங்கம் வரும் காலத்தில் மீனவர் பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்வுகாண அரசு தயாராக இருப்பதாக வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, முதல் செயலாளர் திரு. ராம் பாபு மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2025 07 14 at 17.17.45

WhatsApp Image 2025 07 14 at 17.17.46

WhatsApp Image 2025 07 14 at 17.17.46 1

சமீபத்திய செய்திகள்

Youtube