en banner

fishing boat 1கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, தேவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற IMUL-A-0066-MTR எனும் பல நாள் மீன்பிடிக் கலன், மாலைதீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று (29) அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான படகு, நீரோட்டத்தின் வழியே இந்தோனேசிய கடல் எல்லை வரை அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அதில் தப்பிய நான்கு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆறு மீனவர்களுடன் பயணித்த இந்தப் படகு, ஒக்டோபர் 16 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், விபத்தின்போது ஒரு மீனவர் உடனடியாகக் காணாமல் போயுள்ளார். படகின் மேல் தங்கியிருந்த ஐவரில், மற்றொருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.

கவிழ்ந்த படகின் மீது இருந்த நான்கு மீனவர்களும் இந்தோனேசிய மீன்பிடிக் கலன் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூலமாகவே இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மீட்கப்பட்ட மீனவர்கள், அருகிலுள்ள வர்த்தகக் கப்பல் ஒன்றுக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், திரு. சுசந்த கஹவத்த அவர்கள், "மீட்கப்பட்ட மீனவர்களை அழைத்து வருவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளதால், பயணத்திற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனாலும், கூடிய விரைவில் இந்த மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்," எனக் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட மீனவர்கள்:

H.K.A.D. Lakmal

W.B.O. Madhushanka

P.M.S.A. Kumara

T.H.P. Nimanka

காணாமல்போன/உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மீனவர்கள்:

E.D.R. Navodana

L.H.D.A. Suranga

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து, மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube