en banner

WhatsApp Image 2025 12 05 at 18.40.14தொழில்துறையினருடன் இணைந்து விரைவான மீட்புத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

அண்மையில் வெள்ளத்தால் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தொழிலான இறால் வளர்ப்புத்துறைக்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தை மதிப்பிடுவதற்கும், விரைவான மற்றும் நிலையான மீட்புத் திட்டத்தை வகுப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்களுக்கான பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேற்று (04) சிலாபம் பகுதியில் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச மற்றும் தேசிய உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய ஆகியோர் அடங்கிய குழு, 25 ஏக்கர் பாரிய அளவிலான பண்ணை உட்பட கடுமையாக சேதமடைந்த இறால் பண்ணைகளை ஆய்வு செய்ததுடன், இலங்கை தேசிய உயிரினவளர்ப்பு அபிவிருத்திச் சங்கத்துடன் (SLADA) முக்கியமான கலந்துரையாடல்களையும் நடத்தியது.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த டிசம்பரில் முக்கிய அறுவடை நடைபெறவிருந்த நிலையில், உற்பத்தி அலகுகளில் 95% இற்கும் அதிகமானவை அழிவடைந்துள்ளன. இதன் விளைவாக ரூ. 5-6 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது விவசாயிகளை மட்டுமல்ல, கடன் அடிப்படையில் சேவைகளை வழங்கிய இனப்பெருக்க நிலைய உரிமையாளர்கள் மற்றும் தீவன விநியோகத்தர்கள் உள்ளிட்ட முழு விநியோகச் சங்கிலியையும் கடுமையான நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது.

இந்த நிகழ்வில் பங்குதாரர்களிடம் உரையாற்றிய பிரதி அமைச்சர் கமகே, அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த முக்கியமான துறையை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

"இது எமது பிரதான ஏற்றுமதித் தொழில்துறையொன்றுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும். இதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதுடன் மட்டுமல்லாமல், மிகவும் வலுவான மற்றும் நிலையான மட்டத்திற்கு இத்தொழில்துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்," என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், பல்வேறு கட்டங்களைக் கொண்ட மீட்சி உத்திகள் குறித்து இங்கு உடன்பாடு எட்டப்பட்டது:

உடனடி சேத மதிப்பீடு: NAQDA அதிகாரிகள் மற்றும் SLADA பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஊடாக, ஒரு வார காலத்திற்குள் ஒவ்வொரு பண்ணையினதும் சேதம் மற்றும் செலவுகளை மதிப்பீடு செய்தல்.

கட்டங்கட்டமாக உற்பத்தியை ஆரம்பித்தல்: சேதத்தின் அளவைப் பொறுத்து பண்ணைகளை வகைப்படுத்தி, குறைந்த சேதமடைந்த பண்ணைகளை ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவும், ஏனைய பண்ணைகளை புனரமைத்ததன் பின்னர் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆரம்பிக்கவும் திட்டமிடல்.

நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி: பாதிக்கப்பட்ட விவசாயிகள், இனப்பெருக்க நிலைய உரிமையாளர்கள் மற்றும் தீவன விநியோகஸ்தர்களுக்கு நிதி நிவாரண பொறிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அரசாங்கம் தலையிடுதல்.

இந்த மீட்சிச் செயற்பாட்டின் வெற்றிக்காக, சரியான தரவுகளை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு NAQDA தலைவர் கித்சிறி தர்மப்பிரிய கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டு அணுகுமுறைக்கு அனைத்துத் தரப்பினரும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்ததுடன், இது இறால் தொழில்துறையின் விரைவான மற்றும் நிலையான மறுமலர்ச்சிக்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

WhatsApp Image 2025 12 05 at 18.40.15 1

WhatsApp Image 2025 12 05 at 18.40.13

WhatsApp Image 2025 12 05 at 18.40.15

WhatsApp Image 2025 12 05 at 18.40.14 1

WhatsApp Image 2025 12 05 at 18.40.16

சமீபத்திய செய்திகள்

Youtube