வங்காள விரிகுடா கடல்சார் சூழல் தொகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான ‘BOBLME II’ செயற்திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் (3rd Regional Project Steering Committee Meeting) இன்று (19) நீர்கொழும்பு ஜெட்விங் சீ (Jetwing Sea) ஹோட்டலில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச, சமுத்திர வலயத்தில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார்.
இங்கு செயலாளர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
“உலகில் மிக முக்கியமான சமுத்திரக் கட்டமைப்புகளில் ஒன்றான வங்காள விரிகுடா, மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கிறது. கடல் வளங்களின் அதீத சுரண்டல், கடல் மாசடைதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) போன்ற எல்லை தாண்டிய பிரச்சினைகளை ஒரு நாடு மாத்திரம் தனித்துத் தீர்க்க முடியாது. இலங்கை தற்போது அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற ‘தேசிய கடற்றொழில் கொள்கையை’ நடைமுறைப்படுத்தி வருவதுடன், அறிவியல் தரவுகளின் அடிப்படையிலான முகாமைத்துவத்தின் ஊடாக கடல் வளங்களைப் பாதுகாக்க நாம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.”
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), ஐயுசிஎன் (IUCN), நோர்வேயின் (NORAD), SEAFDEC மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) போன்ற சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை (20) நீர்கொழும்பில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இப்பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விசேட கள விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் கடல் அட்டை பண்ணைகளை (Sea Cucumber farms) பார்வையிடவும், மன்னார் வெடித்தல்தீவு இயற்கை சரணாலய மீனவ சமூகத்தைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.











