
"எமது இலக்கு, மீனவ சமூகத்திற்கு சுபீட்சத்தையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும் ஒரு வளமான எதிர்காலமாகும்"
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் நடைபெற்ற விசேட புத்தாண்டு நிகழ்வில், எதிர்வரும் ஆண்டு கடற்றொழில் துறைக்கு ஒரு செயல்திறன் மிக்க, உணர்வுபூர்வமான மற்றும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் உறுதியளித்தார். அரச சேவை உறுதியுரை, சத்தியப் பிரமாணம் மேற்கொண்டதன் பின்னர், அமைச்சு ஊழியர்களிடம் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.
2025 ஆம் ஆண்டில் இடப்பட்ட அத்திவாரத்தின் மீது, 2026 ஆம் ஆண்டை ஒரு செயல்மிக்க ஆண்டாக மாற்றுவதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ், அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை, வழமை போன்று ஆண்டின் நடுப்பகுதியில் வழங்காமல், ஜனவரி மாதத்திலிருந்தே வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம், அரச சேவைக்குக் கிடைத்த பெரும் ஆறுதலாகும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"கடந்த ஆண்டை நாம் ஒரு பெரும் சூறாவளியின் வேதனையுடன் நிறைவு செய்தோம். ஆனாலும், அந்த சவாலுக்கு மத்தியில், எமது அமைச்சு ஊழியர்கள் ஒன்றிணைந்து, சேதங்களை மதிப்பீடு செய்து, மீண்டெழுவதற்கான அடித்தளத்தை அமைத்தனர்," என பிரதி அமைச்சர் தெரிவித்தார். "2026 இல், அந்த அடித்தளத்தின் மீது நாம் ஒரு பலமான கட்டடத்தை எழுப்புவோம். 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் தேசிய தொலைநோக்கின் கீழ், ஒரு உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது இலட்சியமாகும்."
இங்கு அறிவிக்கப்பட்ட பிரதான முன்னுரிமைகளில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது முக்கிய இடம்பிடித்தது. எதிர்வரும் 5 ஆண்டுகளில், மொத்த தேசிய உற்பத்தியில் கடற்றொழில் துறையின் பங்களிப்பை, தற்போதுள்ள 1% மட்டத்திலிருந்து 5% ஆக உயர்த்துவது பிரதான இலக்காகும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். அதற்கு இணையாக, இத்துறையின் மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு வருமானத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுச் சேவையின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் பிரதி அமைச்சர் விசேடமாகக் குறிப்பிட்டார். அமைச்சுக்கு வருகை தரும் மீனவ சமூகத்தினருக்கு, தேவையற்ற தாமதங்கள் இன்றி, வினைத்திறனானதும் கௌரவமானதுமான சேவையை வழங்கி, அவர்களின் இதயங்களில் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதை அனைத்து அதிகாரிகளின் முக்கியமான பொறுப்பாக மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள், "எமது இறக்கைகளில் எமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் அமர்ந்திருக்கும் கிளையைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. 2026 ஆம் ஆண்டின் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள, எமது அமைச்சு அணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது," எனக் கூறி ஊழியர்களை ஊக்குவித்தார்.








