'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை, 'சீ-நோர்' (Cey-Nor) நிறுவனத்தின் ஊடாக முற்றாகத் திருத்தி மீண்டும் மீனவர்களிடம் கையளிப்பதும், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) பங்களிப்புடன் புதிய வள்ளங்கள் மற்றும் வலைகளை விநியோகிப்பதும் ஆகும். மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 16 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு 26.9 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது 72 புதிய வள்ளங்கள் மற்றும் 1,318 வலைத் தொகுதிகள் மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கடற்றொழில் திணைக்களம், 'சீ-நோர்' நிறுவனத்தின் ஊடாக 2 புதிய படகுகளை வழங்கியதோடு, பகுதியளவில் சேதமடைந்த 14 படகுகளை திருத்தி மீண்டும் கையளித்தது.
இந்த பிரதான வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக, அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலுடன் தொடர்புடைய மேலும் பல இடங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டதுடன், மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்கள் மைய அரசியல் தொலைநோக்கினை வலியுறுத்தினார். "புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எமது ஜனாதிபதி இரவு பகல் பாராது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். அனர்த்த வேளைகளில் கட்சி, நிற, இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்குவது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை காலம் நாட்டைச் சில உயர்குடி குடும்பங்களே ஆட்சி செய்தன. ஆனால் இன்று, குப்பி விளக்கு வெளிச்சத்தில் படித்து, மக்களின் துயரங்களை நன்கு அறிந்த ஒரு தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார்," என அமைச்சர் தெரிவித்தார். மேலும், கடற்றொழில்துறை நவீன தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கைத்தொழிலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயத்திற்கு அமைவாக, அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டதுடன், அரசாங்கத்தின் கொள்கைகளை வினைத்திறனான முறையில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், 'சீ-நோர்' நிறுவனத்தின் தலைவர் அஜித் எதிரிசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.












