சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு "சதுன் புதா 04" (IMUL-A 0852 CHW) எனும் பலநாள் மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்களே இலக்காகியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை கரைக்கு அழைத்து வரப்பட்ட இந்த மீனவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்:
"இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் மிலேச்சத்தனமானது. இவர்களது கூற்றுப்படி, இது இந்தியக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. எவ்வாறாயினும், இதனுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, இந்தியாவின் பெயர், கொடி அல்லது மொழியைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் குழு இக்குற்றத்தை இழைத்திருப்பின், அது இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், எமது மீனவ சமூகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்."
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறியப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினர் இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
"நாங்கள் கடற்றொழில் அமைச்சாக மீனவ சமூகத்தின் பாதுகாப்பிற்காக முன்னிற்கின்றோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்," என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னர், "தினிதி துவ 01" மற்றும் "தினிதி துவ 03" ஆகிய படகுகளில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு மீனவர் குழு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் கடந்த 31 ஆம் திகதி அவ்வைத்தியசாலைக்குச் சென்று அவர்களின் நலன் விசாரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







