"மீன்பிடித் துறைமுகங்களுக்கு வரும் மக்கள் புன்னகையுடன் வெளியேறும் வகையிலான சேவையை வழங்குங்கள்" - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் இலக்கை நோக்கி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை வினைத்திறனான முறையில் பயன்படுத்துமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (மார்ச் 4) கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை வழங்கிய மக்களுக்காக ஆற்ற வேண்டிய சேவைகளை குறைவின்றி நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். விசேடமாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 2026 காலப்பகுதிக்குள் அந்த நிதியை அதிகபட்ச வினைத்திறனுடன் பயன்படுத்தி, திட்டமிடப்பட்ட கருத்திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடந்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து மீன்பிடித் துறைமுகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனச் சுட்டிக்காட்டினார். விசேடமாக காலி போன்ற அதிக நெரிசல் மிக்க துறைமுகங்களில் இறங்குதுறை (Jetty) பராமரிப்பு, வீதித் தொகுதி மற்றும் தூய்மையை உயர் மட்டத்தில் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
"மீன்பிடித் துறைமுகத்திற்குச் சேவையைப் பெற்றுக்கொள்ள வரும் மீனவ மக்களும் ஏனையோரும் புன்னகையுடன் உள்ளே வந்து, தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு புன்னகையுடன் வெளியேறிச் செல்லக்கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி துறைமுகக் கட்டமைப்பைத் தூய்மையாகவும் முறையான வகையிலும் பேணிச் செல்வதற்கு உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பு இன்றியமையாதது," எனப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுனுஆராச்சி உள்ளிட்ட கூட்டுத்தாபனத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







