கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நோர்வே தூதரகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சரின் அண்மைய நோர்வே விஜயத்தின் பிரகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்பை புதிய மட்டத்திற்கு இட்டுச் செல்வதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இச்சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் டோர்மோட் நுலண்ட் (Mr. Tormod Nuland) மற்றும் நோர்வேயின் கௌரவத் தூதுவர் மனோ சேகரம் (Mr. Mano Sekaram) ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை அரசு சார்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்திருந்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர், 1971ஆம் ஆண்டு முதல் சீநோர் (Cey-Nor) நிறுவனம் ஊடாக நிலவி வரும் நீண்டகால நட்புறவைப் பாராட்டினார். தற்போது வௌ்வேறாக இயங்கும் சீநோர் (Cey-Nor) மற்றும் நோர்த் சீ (North Sea) ஆகிய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து, நோர்வேயின் நவீன தொழில்நுட்பத்தின் கீழ் அவற்றை மீள்வடிவமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம், லுனுவில மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் உள்ள வலை உற்பத்தி நிலையங்களை நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களாக மாற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்றொழில் துறையில் நிலவும் அதிகப்படியான எரிபொருள் செலவைக் குறைக்கும் நோக்கில், மீன்பிடிக் கலன்களுக்கு 'பெட்டரி' (Battery) மற்றும் 'ஹைட்ரஜன்' (Hydrogen Cells) போன்ற பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இலங்கையில் காணப்படும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் (EU) அங்கீகாரம் பெற்ற 44 மீன் பதப்படுத்தும் நிலையங்களைப் பயன்படுத்தி, நோர்வே நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு வர்த்தகங்களை (Joint Ventures) ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், நாரா (NARA) நிறுவனத்துடன் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சித் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தவும், நோர்வேயில் நடைமுறையிலுள்ள "ஆபத்து தயார்நிலைத் திட்டங்களை" (Preparedness Plan) இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இலங்கையின் கடற்றொழில் துறையிலுள்ள முதலீட்டு
வாய்ப்புகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக நோர்வே வர்த்தகத் தூதுக்குழுவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அமைச்சர் இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.







