2025 செப்டம்பர் 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ஜி.ஜி.எஸ்.சி. ரோஷன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சுகத் யாலேகம, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கான புரதச்சத்து வழங்குவதற்கும் பெரும் பங்களிப்பு வழங்கும் கடற்றொழிலாளர்கள், நீண்டகாலமாக பல சிரமங்களுக்கும் சமூக ரீதியான ஓரங்கட்டல்களுக்கும் உள்ளாகி வருவதாக அமைச்சர் இக்கூட்டத்தில் தெரிவித்தார். காணாமற்போன, விபத்துக்குள்ளான அல்லது வெளிநாடுகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிலையை மாற்றும் நோக்குடன், ஜனாதிபதி நிதியம் ஊடாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். சாதாரண தர மாணவர்களுக்கு மாதம் 3,000 ரூபாயும், உயர்தர மாணவர்களுக்கு மாதம் 5,000 ரூபாயும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாயும் (ஒரு வருடத்திற்கு) கிடைக்கும். இந்த நிதி தற்போது பிரதேச செயலக மட்டத்திலும் இணையம் மூலமாகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், கடற்றொழில் அமைச்சினால் காப்புறுதித் திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட கடற்றொழில் சமூகத்தினர் தங்கள் பிரதேச செயலகங்களுக்குச் சென்று உரிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த முக்கியமான தகவல்களை கடற்றொழில் சமூகத்திடம் சரியாக கொண்டு செல்லுமாறு ஊடகவியலாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.