"திட்வா" (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவ சமூகத்திற்கு 26.9 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தின் கடற்றொழில் துறையின் முக்கிய மையமாக விளங்கும் இத்துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 1,300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக, துறைமுகத்தின் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் துரித நிர்மாணப் பணிகளுக்காக 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
துறைமுக வளாகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், அதன் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினருடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்:
"மீனவ மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாகவும் பொருளாதார ரீதியாக நிலையானதாகவும் மாற்றுவது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதற்காக ஒட்டுமொத்த கடற்றொழில் துறையையும் நவீனமயப்படுத்தி, துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ச்சியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். வாழைச்சேனை மீனவ சமூகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த இந்த அபிவிருத்திப் பணிகளை விரைவாக நனவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நிலைபேறானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நான் உறுதியளிக்கிறேன்."







