ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் துறையின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.
அதன்படி, பலநாள் மீன்பிடிக் கலன்களுக்கு மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் அதேவேளை, "கலன் கண்காணிப்பு முறைமை" (Vessel Monitoring System - VMS) ஊடாக அந்த கலன்களின் பயணத் தகவல்களை உறுதிப்படுத்தி, தேவையான எரிபொருள் அளவை முறையாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளுக்கு முன்னர் காணப்பட்ட நடைமுறைக்கு அமைய, கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக கடற்றொழில் அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் இயங்கும் இத்தகைய படகுகள் சுமார் 30,000 காணப்படுவதுடன், ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 25 லீட்டர் வீதம் 5 நாட்களுக்கு ஒருமுறை எரிபொருள் விநியோகிக்கப்படும். நெடுந்தீவு மற்றும் பத்தலங்குண்டுவ போன்ற தொலைதூரப் பிரதேச மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் உள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு (Generators) தேவையான எரிபொருளை, இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (Ceypetco) எட்டப்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் என செயலாளர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொதுவான தீர்மானங்களுக்கு அமைய, புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு அமைச்சின் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும்.





