தென் மாகாணத்தின் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 86 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டமொன்று கடந்த மார்ச் 13ஆம் திகதி மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை தென் மாகாண கடற்றொழில் அமைச்சு வழங்கியிருந்தது.
மாத்தறை மாவட்டச் செயலகத்தின் காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாத்தறை மாவட்ட மீனவ சமூகத்திற்கு தோணிகள், மிதவைகள் (Outriggers), வலைகள், மீன் பெட்டிகள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான வலைக்கூடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் பல வழங்கி வைக்கப்பட்டன. இதற்கிணையாக, காலி மாவட்ட நடமாடும் மீன் வியாபாரிகளின் சேவையை முறைப்படுத்தும் வகையில், லபுதுவ 'தக்ஷிணபாய' வளாகத்தில் அவர்களுக்கு புதிய மீன் விற்பனை கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாத்தறை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன மற்றும் தென் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். காலி நிகழ்வில் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நுவன் குணரத்ன, காலியின் உதவி கடற்றொழில் பணிப்பாளர் திருமதி இனோகா கமகே மற்றும் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பாளர் திரு. நாலக சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்ததாவது:
"தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் மீனவ சமூகம் வழங்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இத்துறையை மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் பௌதிக வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். இந்த உபகரணங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தென் மாகாணத்தின் மீன் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மேலும் முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது."
மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்:





காலியில் நடைபெற்ற நிகழ்வின் நிழற்படங்கள் :








