en banner

WhatsApp Image 2026 03 26 at 14.59.39 1நாட்டின் தற்போதைய விசேட சூழ்நிலை குறித்து ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.

அதன்படி, கடற்றொழில் திணைக்களத்தின் தேடல் மற்றும் மீட்புப் பிரிவு, செயற்பாட்டுப் பிரிவு, கலன் கண்காணிப்பு மையம் (VMS) மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீன் இறக்குமதி-ஏற்றுமதிப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலகுகளும் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணித்தியாலங்களும் வழமை போன்று இயங்கும். மீனவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எவ்வித தடையுமின்றி எந்நேரத்திலும் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நிலவும் உலகளாவிய யுத்த சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, கடற்றொழில் துறைக்காக விசேட எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து செயலாளர் பின்வருமாறு விளக்கமளித்தார்:

* பலநாள் கடற்றொழில் கலன்கள்: அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலிருந்தும் தமது வௌியேறல் படிவத்தின் (Departure Form) அடிப்படையில் தேவையான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

* ஒருநாள் மற்றும் சிறிய ரகப் படகுகள்: மண்ணெண்ணெய் (Kerosene) மற்றும் பெட்ரோல் வழங்குவதற்காக கடற்றொழில் பரிசோதகர்கள் ஊடாக உரிய எரிபொருள் நிலையங்களுக்கு படகுகளின் பெயர்ப்பட்டியல்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாரத்திற்கு 4 நாட்கள் தொழிலில் ஈடுபடுவதாகக் கருதி, வாரமொன்றுக்கு 100 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் இயந்திரத்தை இயக்குவதற்குத் தேவையான பெட்ரோல் அளவைப் பெற்றுக்கொள்ள முடியும். மீனவர்கள் தமது பிரதேச கடற்றொழில் அதிகாரிகள் ஊடாக இதனை ஒருங்கிணைத்துக்கொள்ளலாம்.

* பதப்படுத்துதல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையங்கள்: மீன் பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையங்களின் மின்பிறப்பாக்கிகள் (Generators) மற்றும் கொதிகலன்களுக்கு (Boilers) தேவையான எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒருங்கிணைப்பு பணிகள், கடற்றொழில் அமைச்சின் ஊடாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.

கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையினருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் ஏதேனும் சிக்கல்கள் குறித்து அறிவிக்க 011 432 3389 என்ற அவசர அழைப்பு இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube