en banner

Ministerமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் நாட்டின் மீன்பிடித்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகள் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மீன்பிடித் தொழிலை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்குவது குறித்து இந்தக் கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, குறித்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (06) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் : "உலகளாவிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மீனவ சமூகத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு விரைவான கொடுப்பனவை வழங்கவும், நாட்டின் மீன் விநியோகத்தை வழமை போன்று பேணவும் முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

சமீபத்திய செய்திகள்

Youtube