கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பது, அவர்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைவருக்கும் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் பிரதேச அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதே பிரதி அமைச்சரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
மேலும், அம்பாறை மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளும், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் 'நாரா' நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட கடற்றொழில் அமைச்சுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளும், அத்துடன் பல மீனவர் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அடையாளம் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்
அம்பாறை மாவட்டம் கடல் மற்றும் நன்னீர் கடற்றொழில் இரண்டிலுமே வெற்றிகரமாக ஈடுபடும் ஒரு மாவட்டமாகும். இக்கூட்டத்தில் மீனவ சமூகத்தால் முன்வைக்கப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பான தீர்மானங்கள் பின்வருமாறு:
நீர்த்தேக்கங்களில் சல்வீனியா போன்ற தாவரங்கள் பரவுதல்: பல நீர்த்தேக்கங்களில் சல்வீனியா போன்ற நீர்வாழ் தாவரங்கள் படிந்து நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு குறைந்து, மீன் உற்பத்தியைப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கங்களை விரைவாகச் சுத்தம் செய்து கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
வனவிலங்கு திணைக்களம் தொடர்பான பிரச்சினைகள்: சில வனவிலங்கு அதிகாரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தடங்கல்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகள் வழங்குவதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கு இணங்க மீனவர்கள் செயற்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத கடற்றொழில் மற்றும் மீன் அறுவடைத் திருட்டு: சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் கடற்றொழில் துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கல்முனை, மட்டக்களப்பு போன்ற எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மீன் அறுவடைத் திருட்டுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களம் இணைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன் மூலம் மீன் அறுவடைத் திருட்டுகள் கணிசமாக குறைந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் மற்றும் கடற்றொழில் உபகரணத் தேவை: பாணமை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாமை மற்றும் ஓக்கந்த, பாணமை போன்ற பிரதேசங்களில் கடற்றொழில் உபகரணங்களுக்கு கடுமையான தேவை இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரதேசங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் கடற்றொழில் உபகரண விற்பனை நிலையங்களைத் திறப்பதற்காக அரசாங்கத்துடன் கலந்துரையாடி விரைவாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பல நாள் மீன்பிடி படகுகளுக்கான துறைமுக வசதிகள்: அம்பாறை மாவட்டத்தில் பல நாள் மீன்பிடி படகுகளுக்கான மீன்பிடித் துறைமுகம் இல்லாமை ஒரு பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள ஒலுவில் துறைமுகம் முறையான சாத்தியவள ஆய்வு இன்றி கட்டப்பட்டதால் "வெள்ளை யானை" ஆகிவிட்டதாக மீனவ சமூகம் குற்றம் சாட்டியது.
நன்னீர் மீனவர்களுக்கான போக்குவரத்து வசதிகள்: நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு போக்குவரத்து வசதிகளில் உள்ள தடைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வனவிலங்கு சரணாலயங்கள் வழியாகச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்கள் தடங்கலின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
மீன் குஞ்சுகளை விடுவித்தல் மற்றும் வீதி வசதிகள்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விரைவாக விடுவிப்பதற்கும், மீனவ சமூகத்திற்கு தேவையான வீதி வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ், கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.